Thursday 6 February 2014

இயக்குநர் செல்வராகவன் பற்றி

அரிதான படைப்பாளியும் அதிர்ச்சிகரமான ஏமாற்றமும்

-ச.கிருஷ்ணன்

அண்மையில் வெளியான படங்களில் மிகப் பரபரப்பாக எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் இரண்டாம் உலகம். இந்தப் படத்தின் நாயகன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்துவரும் ஆர்யா. நாயகி தமிழில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் அன்ஷ்கா. ஆனால் அதற்கு முன்பு வெளியான நட்சத்திர நடிகர்களின் படங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆயிரக் கணக்கான திரைய்ரங்குகளில் வெளியானது

பெரிய நட்சத்திர மதிப்பு இல்லாத இந்தப் படத்துக்கு. இத்தனை திரையரங்குகள் கிடைத்ததற்கு காரணம் இந்தப் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்புதான். அந்த எதிர்பார்பை ஏற்படுவதற்கான ஒரே காரணம் இந்தப் படத்தின் இயக்குனர் செல்வராகவன்.

பொதுவாக தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கிக்கொண்டிருக்கும் இயக்குனர்களுக்கு நட்சத்திர நடிகர்களுக்கு இருக்கும் வரவேற்பு இருக்கவே செய்யும். இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் இந்த வரிசையில் வருவர். இயக்குனர் தரணி, கவுதம் மேனன் ஆகியோரும் ஒரு காலத்தில் இந்த வரிசையில் இடம்பெற்றிருந்தனார். ஆனால் ஒரு சில தோல்விகளுக்குப் பிறகு அவர்களின் படங்களுக்கு மதிப்பு இருக்கிறதே தவிர பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்ல முடியாது.

தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு இயக்குனர்களுக்குத்தான் வெற்றி தோல்வியினால் பாதிக்கப்படாத எதிர்பார்ப்பும் மரியாதையும் இருந்துவருகிறது. ஒருவர் மணி ரத்னம். இன்னொருவர் செல்வராகவன். அவர் தமிழில் இயக்கிய கடைசி மூன்று படங்கள் வணி வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் அவரது அண்மைய படைப்பான இரண்டாம் உலகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததை வைத்து அவர் மிக அரிதான சிறப்புகளைக் கொண்ட இயக்குனர் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டாம் உலகம் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்துவிடும் விளிம்பில் இருக்கிறது. அதைவிட ஏமாற்றத்துக்குரிய சொல்லப்போனால் அதிர்ச்சிகரமான விஷயம் செல்வராகவனின் மற்ற தோல்விப் படங்களில் இருந்த சிறப்பம்சங்கள் இந்தப் படத்தில் இல்லை என்பதுதான்.

செல்வராகவனா இப்படி ஒரு படம் கொடுத்தார் . என்று அதிர்ச்சி இரண்டாம் உலகத்தைப் பார்த்த பலருக்கு ஏற்பட்டது. அடைந்த ரசிகர்கள் ஏராளம்.

பொதுவாக எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்ட படம் ஏமாற்றமளித்தால் ”நான் செலவழித்த 120 ரூபாய் வீணாகிவிட்டதே என்ற அடிப்படையில்தான் சமுக வலைதளங்களில் இளைஞர்கள் வெளியிடும் விமர்சனங்கள் அமைந்திருக்கும். ஆனால் இரண்டாம் உலகம் படம் பற்றிய பெரும்பாலான இளைஞர்களின் நிலைத்தகவல்கள் “செல்வராகவனிடம் இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை” என்ற கருத்தையே பேசின. .

இரண்டாம் உலகம் ஃபேண்டஸி வகையைச் சேர்ந்தது என்பதைத் தலைப்பே சொல்லிவிடுகிறது. ஃபேண்டஸி வகைப் படங்கள் சினிமா ரசிகர்களுக்கும் புதிதல்ல. செல்வராகவனுக்கும் புதிதல்ல. அவர் இயக்கி 2010இல் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஃபேண்டஸி படம் என்றும் வகைப்படுத்தலாம். எனவே இரண்டாம் உலகத்தில் பின்னியிருப்பார் செல்வா என்ற எதிர்பார்ப்புடன் திரையரங்குக்குள் நுழைந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களைப் படைக்கிறார் செல்வா. ஒன்று நாம் வாழும் பூமி. இன்னொன்று இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர வேறு கோள்களிலும் மனித உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உண்டு என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேற்று உலகம். தலைப்பு சொல்லும் இரண்டாம் உலகம் என்பது இதுதான்.

நம்பிக்கையில் கட்டமைக்கப்பட்ட உலகம் என்ற கருத்தாக்கமே இந்தப் படத்தை ஃபேண்டஸி வகைமைக்குள் கொண்டுவருகிறது. ஃபேண்டஸிக்களில் தர்க்க ரீதியான் ஓட்டைகளைப் பார்க்க வேண்டியதில்லை என்பது பொதுவாகப் பின்பற்றப்படும் விதி. ஏனெனில் கற்பனையான உலகத்தின் கற்பனை சார்ந்த என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாம். எனவே இரண்டாம் உலகத்தில் ந்டக்கும் விஷயங்களுடன் தர்க்கத்தைத் தொடர்புபடுததிப் பார்க்க வேண்டாம் என்ற மனநிலைக்குத் தயாராகிறோம்.

ஆனால் தர்க்கத்தை மறக்க வேண்டுமென்றால் சம்பவங்கள் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் எதற்காக இப்படி ஒரு கற்பனை என்றுதான் தோன்றும். செல்வராகவனின் கற்பனையில் உருவான உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அந்த எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கின்றன.

சுவாரஸ்யமில்லாதது மட்டும் இந்த எண்ணத்துக்குக் காரணமல்ல. செல்வராகவனின் கற்பனை உலகத்தில் புதுமையாக ஒன்றுமே இல்லை. பெண்களை அடிமைகளாக நடத்துவது. அனைத்துப் பெண்களையும் தன் அந்தப்புரத்தில் சேர்க்க நினைக்கும் மன்னன், அனாதைப் பெண்ணை அனைவரும் இழிவாக நடத்துவது என பூமிக்கும் பொருந்தும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

இந்த உலகத்துகே உரித்தான விஷயங்களாக செல்வராகவனின் கற்பனையில் உதித்தவை யாவும் என்ன? எதற்காக இப்படி? என்ற அடிப்படைக் கேள்விகளுக்கே பதில் சொல்லவில்லை. நாயகன், நாயகியைத் தவிர அனைவருக்கும் ஆங்கிலேய முகங்கள். ஆனால் அவர்கள் தமிழ் பேசுகிறார்கள். தமிழ் பேசும் வேற்றுமொழி முகங்கள் என்பது செல்வராகவனின் கற்பனை என்றால் அதை ஏன் ஆங்கிலேயர்களுடன் சுருக்கிக்கொண்டிருப்பதற்கான் காரணத்தை படத்தி சொல்லியிருக்க வேண்டும்.

அம்மா என்று ஒரு கடவுள் பாத்திரம் மிகக் குழப்பங்கள் நிறைந்த பாத்திரமாக இருக்கிறது. முந்தைய செல்வராகவன் படங்களில் ஒரு சில நிமிடங்களுக்கு வந்துபோகும் பாத்திரங்களின் செய்கைகள் கூட தெளிவான காரண காரியங்களுடன் விவரிக்கபப்ட்டிருக்கும். ஆனல் அம்மா கடவுள் யார்.அவர் கடவுள் என்றால் ஏன் எதிர்களிடமிருந்து விடுவித்துக்கொள்ளும் சக்தி அவருக்கு ஏன் இல்லை. அவருக்கு சக்திகளே இல்லை என்றால் பூமியிலிருக்கும் ஆர்யாவை இந்த உலககுக்கு வரவழைப்பதும், தன் காரியம் முடிந்தவுடன் அவரை வேறொரு உலகுக்கு அனுப்பிவைப்பதும் எப்படி? தர்க்கத்தை மறந்த பின்னும் இதுபோன்ற கேள்விகளை மறக்க முடியவில்லை. 

ஏனெனில் எந்த ஒரு வலுவான காரணமும் இல்லாமல் கதையை நகர்த்துவதற்காக கோர்க்கப்பட்ட நிகழ்வுகளாகவே ’இரண்டாம்’ உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. மனிதர்கள் வாழும் வேறொரு உலகம் என்ற கற்பனையை மட்டும் வைத்துக்கொண்டு எதை வேண்டுமானாலும் காட்டலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சல் காண்பிக்கபப்டுபவையும் சொல்லப்படுபவையும் சுவாரஸ்யமாகவும் இருந்தால்தன் செல்லுபடியாகும். இரண்டாம் உலகத்தில் அது இல்லை என்பதாலேயே அது பலரை ஈர்க்கவில்லை.

இரண்டாம் உலகம் படத்தை ஆதரிப்பவர்களின் வாதம் இரண்டாம் உலகம் என்ற கற்பனைக்காகவே இந்தப் படத்தைப் பாராட்ட வேண்டும் என்று தொனியில் அமைந்திருக்கின்றன. வெள்ளைக்காரன் அவதார் எடுத்தால் வாய் பிளந்து பார்ப்பீர்கள் அதே போன்ற படத்தை தமிழன் எடுத்தால் நிராகரிப்பீர்கள்” என்று ரசிகர்கள் மிதும் விமர்சகர்கள் மீதும் பழிபோடுகிறார்கள் இரண்டாம் உலகம் படத்தை ஆதரிப்பவர்கள். அவதாருக்கும் இரண்டாம் உலகத்துக்கும் மனிதர்கள் வாழும் வேறொரு உலகம் என்ற கற்பனையைத் தவிர வேறொன்றும் பொதுவாக இல்லை. இரண்டாம் உலகம் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை விளக்க நமக்கு அவதார் தேவையில்லை. அவரத் முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவன் படமே போதும்.

ஆயிரத்தில் ஒருவன் குறைகளற்ற படமில்லை என்றாலும் பல வகைகளில் தமிழ் சினிமாவின் தரத்தையும் ரசிகர்களின் ரசனையையும் உயர்த்திய படம். அல்லது உயர்த்துவதற்கு நேர்மையாக முயற்சி செய்த படம். அந்தப் படம் வணிக ரீதியாகத் தோல்வி அடைநததாலும் செல்வராகவனின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம் என்று அதை அடையாளப்படுத்தலாம். அதற்கான காரணஙகள் சிலவற்றைப் பார்ப்போம்

செல்வராகவனை அறவே வெறுப்பவரைக் கூட ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதையில் உள்ள பிரம்மாண்டமே ஈர்த்துவிடும்.பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர்களின் பரம்பரை அழிந்துவிட்டதாக நாம் நினைத்துக்கொண்டிருக்க அவர்களில் ஒரு பிரிவினர் தொலை தூரத்துக்கு தப்பித்துச் சென்று அரசர் காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்ற கற்பனையே ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் தப்பிச் சென்ற சோழர்கள் தங்களை யாரும் பிந்தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக வழி நெடுக பல ஆபத்துகளை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற கற்பனையும் அவைக் காட்சிபடுத்தப்பட்ட விதமும் ரசிகர்களை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தன் என்றால் மிகையாகாது.

மேலும் நரப்லி கொடுத்து நரமாமிசத்துக்காகப் போட்டி போடும் நிலையில் இருக்கிறார்கள் என்ற கற்பனை சிலருக்கு அருவருப்பையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தினாலும் சோழநாஉ சோறுடைத்து என்று நிலையில் இருந்தவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக செய்த விஷயங்களால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதே அந்தக் கற்பனையின் அடிப்படை என்ற வகையில் அதையும் சிலர் பாராட்டினார்கள்.

நூற்றாண்டுகளாக ஒரு மக்கள் கூட்டம் வெளி உலகுக்கு தெரியாமல் தொலை தூரத்தில் வாழ்வது பற்றியோ, நரமாமிசம் தின்னும் நிலைக்கு ஆளானது பற்றியோ, அவர்களைக் இருப்பிடத்தை கண்டுபிடிக்க்கும் பாதையில் பொருத்தப்பட்ட ஆபத்துகளைப் பற்றியோ தர்க்க ரீதியான கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. இந்தப் படத்தை ரசித்தவர்கள் மட்டுமல்லாமல் விமர்சித்தவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை. ஒரு ஃபேண்டஸி வகைமையைச் சேர்ந்த படம் வழங்க வேண்டிய பிரம்மாண்ட உணர்வையும் சுவாரஸ்யத்தையும் ஆயிரத்தில் ஒருவன் ஓரளவுக்காவது திருபதிபடித்தியது என்பதை அந்தப் படத்தின் மீது கடுமையான விமர்சனப் பார்வை கொண்டவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.

அந்தப் படம் வெளியான காலகட்டம் அதன் கதைக்கு கூடுதல் முக்கியத்துவத்தை வழங்கியது. 2009இல் தனித்தமிழ் ஈழத்துக்காகப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பினரும் பல்லாயிரக்கணக்கான் ஈழத் தமிழர்களும் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் துளிக்கூட கருணையற்ற எதிரிகளால் கொல்லப்பட்டார்கள். பெண்கள் அனைவரும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனும் மக்களும் எதிரிகளால் கொன்று குவிக்கப்பட்டதையும் பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானதையும் இதனுடன் தொடர்புபடுத்தி யோசிக்க இடமிருந்தது.  

இரண்டாம் உலகம் இதுபோன்ற பிரம்மாண்டங்களோ சுவாரஸ்யங்களோ எதுவுமே இல்லாத படம் என்பதால்தான் அது ஒரு ஃபேண்டஸி படமாக எடுபடவில்லை.

பூமியில் நடக்கும் காதல் கதையிலும் வழக்கமான் செலராகவன் படங்களில் குறிப்பாக காதலை அவர் கையாளும் விதத்தில் காணக்கிடைக்கும் சிறப்பம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அமையவில்லை. பூமியில் நடக்கும் காதல் காட்சிகளில் ஒரு சில ரசிக்கத்தக்க விஷயங்கள் இருந்தன. அவை செல்வராகவன் என்னும் வசனகர்த்தாவின் ஜாலங்கள். ஒரு ஆணைப் பார்த்தவுடன் அவன் கணவனாக்கிக்கொள்ள பொருத்தமானவனா என்று ஒரு இளம் பெண் எடைபோடுவது. 1000 ஆண்களுக்கு 800 பெண்கள் இருந்தால் மீதமுள்ள 200 ஆண்கள் என்ன செய்வார்கள் என்ற சமுதாயத்தின் மீதான் எள்ளல் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம்.

செல்வராகவனின் கற்பனை உலகில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களும் அவரது வசனம் எழுதும் திறன் சார்ந்ததாகவே இருக்கின்றன.

செல்வராகவன் தோல்விகளால் துவளாதவர். மேலும் அவர் இதுவரை இயக்கியுள்ள படங்களை அலசினால் ஒவ்வொரு படத்தையும் மிகுந்த சிரத்தையுடன் எடுத்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். சாதாரண கதையை எடுத்துக்கொண்டாலும் அதில் தன் தனி முத்திரையைப் பதிப்பவர். பேசப்படாத விஷயங்களைப் பேசினால் அதற்குத் தேவையான உழைப்பைப் போடுபவர். எதைச் சொன்னாலும் தான் சொல்லும் விதத்தால் ரசிகர்களைக் கட்டிப்போடும் வல்லமை படைத்தவர். அவர் இயக்கியுள்ள படங்களைப் பார்ப்பவர்கள் இவற்றில் ஒன்றிரண்டை மறுக்கக் கூடும். அல்லது மேலும் சில சிறப்புகளைக் கூட்டக்கூடும்.

இது போன்ற அரிதான சிறப்புகளுக்காகவே  வணிகத் தோல்வியால் பாதிப்படையாத மரியாதை என்ற அரிதான கவுரவம் செல்வராகவனுக்குக் கிடைத்திருக்கிறது. இரண்டாம் உலகத்தில் செய்த தவறுகளை யோசித்து அவற்றை அறவே தவிர்க்கும் கவனத்துடன் தன் அடுத்த அடியை எடுத்துவைத்தால் அவரது இந்த கவுரத்தை காப்பாற்றிக்கொள்ளலாம்.


அதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்

-திரைக்கூத்து

தேசிய் விருதுகளும் தமிழ் படங்களும்

தேசிய விருதுகள்-2013

தேசிய அரங்கில் தமிழ்ப் படங்களின் நிலை என்ன?

அரவிந்த கிருஷ்ணா

அண்மையில் பத்மஸ்ரீ விருதைப் பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறுத்தபோது தென்னிந்தியக் கலைஞர்களை தில்லியின் ஆளும் வர்க்கம் புறக்கணிப்பது தொடர்பான சர்ச்சை எழுந்தது. காலம் தாழ்ந்தும் தகுதிக்குக் குறைவாகவும் தமிழ் மற்றும் தென்னகக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். எம்.எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், சிவாஜி கணேசன், டி.எம். சௌந்தர்ராஜன், நாகேஷ், பீம்சிங் ஆகியோரின் திறமை தில்லியில் உள்ள விருதுக் குழுவினரின் கண்களில் பட்டதே இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது கலையுலகில் பாரபட்ச அரசியல் என்னும் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

என்றாலும் 80களில் நிலைமை மாறத் தொடங்கியது. தமிழ்நாட்டில் இருக்கும் திறமைசாலிகளும் தேசியத் தேர்வுக் குழுவினரின் கண்களில் படத் தொடங்கினார்கள். கமல் ஹாஸன், இளையராஜா போன்றோருக்கு விருதுகள் கிடைத்தன. தொண்ணூறுகளில் இந்தப் போக்கு மேலும் ஆரோக்கியமாக மாறி மேலும் பல திறமைசாலிகள் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றார்கள். அதற்கடுத்த பத்தாண்டுகளில் விருதுப் பட்டியலில் தென்னகக் கலைஞர்கள் ஆதிக்கம் செலுத்துமளவுக்குப் பாரபட்ச அரசியல் பலவீனமடைந்தது. ஆரோக்கியமான போட்டியும் அங்கீகாரங்களும் நாடு முழுவதும் உள்ள கலைஞர்களுக்குக் கிடைத்துவருகிறது என்று சொல்லலாம். இப்போதும் தேர்வுகள் குறித்துச் சர்ச்சைகள் எழுந்தாலும் பாரபட்சம் என்னும் குரல் அதிகமாக எழுவதில்லை.

2013ஆம் ஆண்டின் தேசிய விருதுகளிலும் தமிழ்ப் படங்களுக்குச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விருதுகள் வழங்கபப்ட்டிருக்கின்ற்ன. சிறந்த மாநில மொழித் திரைப்படத்துக்கான விருதை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 திரைப்படம் வென்றிருக்கிறது. தேசிய அளவில் சிறந்த ஒப்பனைக் கலைக்கான விருதும் அந்தப் படத்தில் பணியாற்றிய ஒப்பனைக் கலைஞர் ராஜா என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. பல பிரச்சினைகளைக் கடந்து வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் கமல் ஹாசனின் விஸ்வரூபம் மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறது. சிறந்த கலை இயக்கத்துக்கான இந்தப் படத்தின் கலை இயக்குநர்களான போன்டாவீ  தார், தவீபஸாஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த லால்குடி என். இளையராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதே படத்தின்உன்னைக் காணாத நான்என்ற பாடலுக்கு கதக் நடனம் அமைத்ததற்காக சிறந்த நடனத்துக்கான விருது கதக் நடக் கலைஞர் ப்ரிஜு மக்ராஜுக்கு வழங்கப்பட்டிருக்கிறதுபாலாவின் பரதேசி திரைப்படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமிக்கு விருது கிடைத்திருக்கிற்து.

இந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடையும் அதே வேளையில் சில கேள்விகளையும் நாம் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தேசிய விருதுகள் என்ற அளவுகோலில் தமிழ் சினிமாவின் இடம் எங்கே இருக்கிறது? அது இப்போது முன்னேறியிருக்கிறதா இல்லையா? தமிழ்ப் படங்கள் தேசிய விருது வழங்க உருவாக்கப்படும் நடுவர் குழுக்கள் தமிழ் சினிமாவை நடத்தும் விதம் எப்படி இருக்கிறது?

பொதுவாக த்மிழ்ப் படஙகள் தேசிய விருது நடுவர் குழுக்களால முறையாக மதிப்பிடப்படுவதில்லை என்ற ஒரு கருத்து திரையுலகினரால் முன்வைக்கபப்டுகிறது. இதில் எந்த அளவு உணமை இருக்கிறது? தொண்ணூறுகளுக்கு முன்பு இருந்த அளவுக்கு மோசமான நிலைமை இல்லை என்றாலும் இன்னமும் பாரபட்சம் முற்றிலுமாக நீங்கிவிட்டதாகச் சொல்ல முடியாது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தேசிய விருது என்றதும் தமிழில் கமல் ஹாசன், இளையராஜா, .ஆர். ரகுமான், வைரமுத்து, எஸ்.பி. பாலாசுப்ரமணியம், சித்ரா, ஹரிஹரன் ஆகிய தமிழ் சினிமாப் பிரபலங்கள் நினைவுக்கு வருவார்கள். இவர்கள் அனைவருமே தத்தமது துறைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். அவற்றில் கணிசமானவை இவர்கள் தமிழ்ப் படங்களில் பணியாற்றிய்தற்காகக் கிடைத்திருக்கின்றன.

இது தவிர அகத்தியன், விக்ரம், தனுஷ், பாலா, வெற்றி மாறன் போன்றோர் தேசிய விருதை வென்றிருக்கிறார்கள். வெற்றி மாறன், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதைப் பெற்றவர்களில் மிகவும் இளையவர்.

ஆனால் முன்னமே குறிப்பிட்டதுபோல, இந்த மாற்றங்கள் 1980களுக்குப் பிறகு வந்தவை. அதற்கு முன் தமிழ் சினிமாவை தேசிய விருதுக் குழு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. மிகச் சிறந்த நடிகரான சிவாஜி நாயகனாக நடித்த படங்கள சிறந்த நடிகருக்கான விருதுக்குப் பொருட்படுத்தப்படவில்லை. 1992இல் வெளியான தேவர் மகனில் நடிததற்காக நடுவர் குழுவின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. நகைச்சுவை மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் சில படங்களில் வில்லனாகவும் வெளுத்துக் கட்டிய நாகேஷுக்கும் 1994இல் வெளியான நம்மவர் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த துணை நடிகர் விருது கிடைத்தது. 

நிலைமை தற்போது மாறினாலும் முற்றிலுமாக மாறிவிடவில்லை. சிறந்த படங்கள் என்னும் வகையில் தேசியத் திரைப்பட விருதுகளின் 60 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இரண்டே தமிழ்ப் படங்கள்தான் (இது அனைத்து மொழிகளிலும்) சிறந்த படத்துக்கான் விருதை வாங்கியிருக்கின்றன, அவை 1990இல் வெளியான மறுபக்கம், 2007இல் வெளியான காஞ்சீவரம்இதுவரை வெளியான ஆயிரக்கணக்கான படங்களில் இரண்டே படங்கள்தானா தேறின?

தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படமாவது மிகச் சிறந்த படைப்பாக வெளியாகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தப் படங்கள் அதிகபட்சம் அந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைத்தான் பெறுகின்றன. இதனால் ஒரே ஆண்டில் பல நல்ல படங்கள் வந்தால் அவற்றுள் மிகச் சிறந்த படங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன.

2012ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 3 தமிழ்ப் படங்களில் இரண்டு படங்கள் 2013இல் வெளியானவை. 2012இலேயே இந்தப் படங்கள், முடிக்கப்பட்டு திரைப்பட விழாக்களுக்கு இந்தப் படங்கள் அனுப்பப்பட்டுவிட்டதாகப் பொருள் கொள்ள வேண்டும். கறாராகப் பார்த்தால் 2012இல் வெளியான படங்களில் வழக்கு எண் 18/9 படம் மட்டுமே விருதைப்பெற்றிருக்கிறது.

மிகச் சிறந்த ஒளிப்பதிவு என்று பலரால் பாராட்டப்பட்ட கும்கி, மாறுபட்ட கதையம்சமுள்ள படங்களாகப் பார்க்கப்பட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், பீட்ஸா உள்ளிட்ட படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவே தெரியவில்லை. பரதேசி படம் ஆடை வடிவமைப்புக்காக மட்டும்தான் தேசிய விருது பெறும் தகுதியைப் பெற்றிருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், பார்த்திபன், பாலா, பாலாஜி சக்திவேல், வசந்த பாலன் ஆகிய இயக்குநர்களின் படங்களும் நடிகராகவும் இயக்குநராகவும் அறியப்படும் கமல்ஹாசனின் படங்களும் தேசிய விருதைப் பெறும் என்று ரசிகர்களை நினைக்கவைத்திருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பல தேசிய விருதுகள் இவர்கள் இயக்கிய படங்களால் கிடைத்தவை என்றாலும் இவர்களின் ஒரு படம்கூட சிறந்த படம் என்ற விருதை வென்றதில்லை. 

இந்த நிலை தொடர்வதற்கு தேசிய நடுவர் குழுவினரிடம் இன்னமும் எஞ்சியிருக்கும் தென்னகம் மீதான பாரபட்சமும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் தென்னிந்திய மாநிலங்களான கேரளமும் கர்நாடகமும் பல்வேறு தேசிய விருதைப் பெற்ற படங்களை வழங்கியிருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது. கன்னடத்துக்கும் மலையாளத்துக்கும் விருது வழங்குபவர்கள் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் ஏன் விருது வழங்கத் தயங்க எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால் தமிழ்ப் படங்களிடம் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதானே பொருள்?

எழுத்தாளரும் காலச்சுவடு மாத இதழின் ஆசிரியர் குழு உறுப்பினருமான நஞ்சுண்டன் தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களைத் தொடர்ந்து கவனித்துவருபவர். கன்னடப் படங்களுக்கும் தமிழ்ப் படங்களுக்கும் தேசிய விருது விஷயத்தில் ஏன் இந்த வேறுபாடு என்பதை அவர் விளக்குகிறார்.

“தமிழில் இலக்கியவாதிகள். நடுநிலையான எழுத்தாளர்கள், வெகுஜன எழுத்தாளர்கள் என்று இருப்பதுபோல் கன்னட சினிமாவில் இலங்கியங்களைப் படமாக்குவது, நடுநிலையான ப்டங்கள், வெகுஜனப் படங்கள் என்று மூன்று விதமான படங்கள் வெளியாகிவருகின்றன. வெகுஜன சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவைவிடக் கன்னட சினிமா கீழ் நிலையில் இருக்கிறது. மறுபுறம் தீவிர இலக்கியங்கள் தொடர்ந்து படமாகிவந்திருக்கின்றன. சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற முதல் கன்னடப் படம் சம்ஸ்காரா. அனந்தமூர்த்தி எழுதிய கதையை பட்டாபி ராமரெட்டி இயக்கினார். அனந்தமூர்த்தியின் கடஷ்ரத்தா என்ற கதையை திரைப்படக் கல்லூரியில் பட்டம் பெற்றவரான கிரீஷ் காசரவள்ளி இயக்கினார். இதுபோல் அனந்த மூர்த்தி,லிங்கேஷ் போன்ற இலக்கியவாதிகள் எழுதிய கதகளை தீவிர இலக்கியவாசிப்பு பலம் நிறைந்த இயக்குநர்கள் இயக்கினார்கள். புட்டண்ணா கனகல் போன்றோர் நல்ல படம் என்று சொல்லக்கூடிய வெகுஜனத் திரைப்படமும் கலைப்படமும் இல்லாத படங்களை இயக்கிவந்தார்கள். பாரதிராஜா இவரிடம்தான் உதவி இயக்குநராகப்  பணியாற்றினார். ஆனால் தமிழ் சினிமாவில் எந்த இலக்கியமும் படமானதில்லை. படமான இலக்கியங்களும் பாராட்டும் விதத்தில் படமாக்கப்பட்டதில்லை. ஜெயகாந்தனின் கதைகளை அவரே இயக்கினார். சம்ஸ்காராவைப் படமாக்க முடியுமென்றால். புளியமரத்தின் கதை, பதினெட்டாவது அட்சக்கோடு ஆகிய நாவல்களைப் படமாக்க முடியாதா என்ன? இந்தக் கதைகள் கன்னடத்தில் வந்திருந்தால் நிச்சயம் படமாக வெளியாகியிருக்கும்” என்று கூறுகிறார். நஞ்சுண்டன். 

தமிழில் நல்ல இலக்கியப் படைப்புகளைப் படமாக்கும் முயற்சிகளைத் தொடங்கினால் தேசிய விருது பெறும் படங்கள் அதிகரிக்கும் என்கிறார் நஞ்சுண்டன். இவர் கன்னடத்திலிருந்து பல இலக்கியப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

திரைப்பட விமர்சகர் ராஜன் குறை விருதுகளைப் பற்றி மாறுபட்ட பார்வையைக் கொண்டிருக்கிறார். “திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்குவதை முக்கியமாகக் கருதுவதில்லை. ஒரு படத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதுதான் முக்கியம். விருது என்பது ஒரு குறிப்பிட்ட அமைப்பு கொடுப்பது. அதை ஒரு சின்ன அடையாளப்படுத்துதலாக வேண்டுமானால் கணக்கிடலாம். எனவே ஒரு படம் விருது வாங்கினால்தான் அது நல்ல படம் என்று நான் நினைக்கவில்லை. அந்தப் படம் சினிமாவுக்கு எந்த வகையில் பங்களித்திருக்கிறது, மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கிறதா என்ற அளவுகோல்களை வைத்தே நான் ஒரு திரைப்படத்தின் மீதான மதிப்புரையை உருவாக்கிக்கொள்வேன். சச்சினை இத்தனை பேர் ரசிப்பது அவர் அடித்த ரன்களுக்காகவும் பல நேரங்களில் தனியாகப் போராடி இந்திய அணியை வெற்றிபெற வைத்திருக்கிறார் என்பதற்காகவும்தான். அவருக்குக் கிடைத்த பத்ம விருதுகளுக்காக அல்ல. துறை சார்ந்த பங்களிப்பையே சினிமாவை மதிப்பதற்கான அளவுகோலாகக் கருத வேண்டும் என்று நான் நம்புகிறேன்” என்கிறார் அவர்.

உண்மையான கலையுணர்வு உள்ளவர்கள் விருதுகளைப் பெரிதாக நினைக்க மாட்டார்கள் என்று சொல்லும் ராஜன் குறை விருதுகளுக்கு அதிக மதிப்பளித்து இந்தப் படத்துக்கு ஏன் விருது கொடுத்தார்கள், அந்தப் படத்துக்கு ஏன் கொடுக்கவில்லை என்று அலசும் விமர்சகர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழில் தரமான இலக்கியப் படைப்புகள் ஏராளமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற படைப்புகளின் மீது நம் இயக்குநர்களின் கவனம் திரும்புமா என்பதைப் பொறுத்து நம் தேசிய விருதுக் கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகமாகலாம். ஆனால் இலக்கியங்களைப் படமாக்கும் உந்துதல் கொண்ட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வருவது தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்க முடியும். இலக்கியத்தைப் படமாக்குகிறேன் என்ற பெயரில் அவற்றைக் கெடுத்துவிடும் அபாயம் இருக்கிறது என்றும் இலக்கியவாதிகள் கவலைப்படுகிறார்கள். தமிழில் தி. ஜானகிராமன், நாஞ்சில் நாடன் ஆகியோரின் படைப்புகள் படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்தவர்கள் இத்தகைய அச்சம் கொள்வதைத் தவிர்க்க முடியாது. நம் இயக்குநர்களின் வாசிப்பும் புரிதலும் ஆழமாக வேண்டும் என்று தீவிர இலக்கிய வாசகர்கள் கருதுகிறார்கள்.

“தமிழில் நாவல்களை வாசிக்கும் திரைப் படைப்பாளிகளில் பலர் நாவலை நாவலாக உள்வாங்குவதாகத் தெரியவில்லை” என்கிறார் நெய்தல் என்னும் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்திவரும் நெய்தல் கிருஷ்ணன். “முதலில் அது ஒரு நாவலாக உள்வாங்கப்பட வேண்டும். பலர் தங்கள் சினிமாவுக்கான விஷயம் கிடைக்குமா என்றுதான் நாவலின் பக்கங்களில் தேடுகிறார்கள்” என்று விமர்சிக்கும் கிருஷ்ணன், இங்கே நாவலைப் படமாக்குவதற்கான திரை மொழி பலவீனமாக இருக்கிறது என்கிறார். செம்மீன் என்னும் இலக்கியப் படைப்பு தந்த அனுபவத்தைப் போலவே செம்மீன் திரைப்படமும் அலாதியான அனுபவத்தைத் தந்தது என்று சொல்லும் கிருஷ்ணன், மோகமுள் என்னும் இலக்கியப் படைப்பு தந்த அனுபவத்தில் ஒரு சிறிய பங்கைக்கூட மோக முள் திரைப்படம் தரவில்லை என்று கூறுகிறார்.

தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கும் தேசிய விருதுகளின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கையில்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவை தேசிய விருதுக் குழுவினர் உதாசீனப்படுத்திய நிலை மாறிவிட்ட நிலையில் சிறந்த படைப்புகள் கவனம் பெறும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் வலுவான படைப்புகள் வந்தால் அவற்றுக்குக் கவனம் கிடைக்கத்தான் செய்யும். வசந்த பாலன்களும் பாலாக்களும் பாலாஜி சக்திவேல்களும் எண்ணிக்கையில் பெருக வேண்டும். அத்துடன் சிறந்த இலக்கியப் படைப்புகளைப் படைப்பூக்கத்துடன் திரைப்படமாக்கும் படைப்பாளிகளும் அவர்களுக்கு ஊக்கமளிக்கும் தயாரிப்பாளர்களும் அதிகரிக்க வேண்டும். இவை நிகழ்ந்தால் வரும் ஆண்டுகளில் பல்வேறு வகைமைகளில் தமிழ்ப் படைப்புகள் மற்றும் படைப்பாளிகளின் பெயர்கள் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

**

பெட்டிச் செய்தி

விருதுகளின் நாயகன்

விருதுகள் என்றால் நினைவுக்கு வரும் பெயர்களில் ஒன்று கமல் ஹாசன். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்று முறை வாங்கியிருக்கிறார்.பன்முகக் கலைஞராக அறியப்படும் இவர் தயாரித்த தேவர் மகனில் சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைத்தது. இவர் இயக்கித் தயாரித்த முதல் தமிழ்ப் படமான ஹேராம் மூன்று தேசிய விருதுகளை அள்ளியது.

இந்த ஆண்டும் இவர் இயக்கித் தயாரித்த விஸ்வரூபம் படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் “மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தூரத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்ட ப்ரிஜு மகராஜ் (கதக் நடனக் க்லைஞர்) என்னிடம் கட்டைவிரலை வாங்காமல் விருது வாங்கிக்கொடுத்திருக்கிறார். என் மேடையில் நின்று அவர் வாசித்த கவிதைக்கு விருது கிடைத்திருக்கிருக்கிறது. தார்ன் (கலை இயக்குநர்) இந்த ஊர்க்காரருமல்ல. அந்த (ஆஃப்கானிஸ்தான்) கலாச்சாரத்துக்கும் புதியவர். அப்படி இருந்தும் அவர் விருது கிடைக்கும் அளவுக்கு உழைத்திருப்பது பெரிய விஷயம்” என்று கூறினார் அவர். 

-திரைக்கூத்து